
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவுக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவிலேயே முதல்முறையாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், பார்வைத் திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான தனிச் சிகிச்சை மையத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்குப் பார்வைத் திறன் கிடைக்கச் செய்தவர் நம்பெருமாள் சாமி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த் கண் மருத்துவமனையைத் தொடங்கி அதன் தலைவராகச் செயல்பட்ட இவர், பல ஆயிரம் பேருக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேயத்தின் அடையாளமாக வாழ்ந்து வந்த, இவரது மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.



