புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி இழப்பால் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர முடிவதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.



