இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கு புதிய எழுச்சி தந்தவர் வ.உ.சி : CM விஜய் புகழாரம்.!

சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர் வ.உ.சிதம்பரனார் என முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடன் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில், தனது புகழ் வணக்கங்களைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டினார். தாய்நாட்டின் விடுதலைகாக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், இந்நாளில் போற்றி நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத் தளப் பதிவில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் களமிறங்கி,  இந்தியர்களின் சுதந்திர உணர்வைத் தூண்டிய மாபெரும் தேசபக்தர் வ.உ.சி என்று குறிப்பிட்டுள்ளார். சுதேசி” என்ற சிந்தனையை வெறும் சொல்லாக அல்லாமல், செயலாக மாற்றிக் காட்டிய அவரது தியாகமும், அவர் ஆற்றிய பங்களிப்பும் தலைமுறைகள் கடந்தும் நம் நினைவில் நிலைத்திருக்கும் என்று தெரிவத்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தளப் பதிவில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தர் ’ வ.உ. சி என்று புகழாரம் சூட்டினார். தனது உணர்ச்சிமிக்க உரைகளின் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டிய வ.உ. சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *