ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், அது ஆவின் நிறுவனத்தைப் புதைகுழியில் தள்ளுவதற்கே வழிவகுக்கும் என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தல் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்த வெண்ணெய், பனீர், பால் பவுடர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பால்பொருட்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தி விட்டது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமுல் நிறுவனத்துடன் போட்டியிடும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஆவின் நிறுவனம் இந்த அளவுக்குச் சீரழிக்கப்படுவதைக் கண்டித்துள்ளார்.
பனீர், வெண்ணெய், நெய், பல வகையான குளிர் பானங்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், அதை நிறைவேற்றுவதில் ஆவின் நிறுவனத்திற்கு என்ன சிக்கல்? என்று வினவியுள்ளார்.
அனைத்து வகையான பால் பொருட்களையும் முழு அளவில் தயாரித்துச் சந்தைப்படுத்துவதை ஆவின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..



