தேசத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தலைவர்கள் பெருமித வாழ்த்துகள்.!

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இந்நந்நாளில் ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் என்றும் நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி என்றும் அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க  இன்றைய தினம் உறுதிகொள்வோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள பதிவில், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், வாழ்வின் உயர்ந்த மதிப்புகளையும் ஒருங்கிணைக்கும் கல்வி அறிவைக் கற்றுத் தந்து, ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் தனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *