விலையேற்றத்தை கட்டுப்படுத்த துப்பில்லாத அரசு – சீமான் கண்டனம்.!

அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வினவியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் இன்றியமையாப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்கத் திறனற்ற தவெக அரசு, சென்னையில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் ஒரு விழுக்காடாகவும் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்திப் பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? என்று வினவியுள்ளார்.

மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை என்று சுட்டிக்காட்டியுள்ளார். வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *