
உத்தரப் பிரதேசத்தில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்க்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரிலிருந்து சிசையா நோக்கிச் சென்ற வேன், எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் 9 பயணிகள் உட்பட மொத்தம் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், லக்கிம்பூர் கெரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளிப்பதாகத் தெரிவித்தார். இந்த விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், உத்திரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரியில் நடந்த விபத்து குறித்துக் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறினார். தங்களது அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.



