
சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர், “நீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுவதற்கு நன்றி. ஆனால், பாஜக நினைத்திருந்தால் அதை மாற்றியிருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், உச்சநீதிமன்றத்தில் ஆணை இருக்கும்போது அதை மாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், “உச்சநீதிமன்றத்தில் ஆணை இருக்கும் போது, அதை சட்டரீதியாக மாற்ற முடியாது” என்று விளக்கம் அளித்தார்.
உடனே குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், “காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மற்ற அனைத்துத் திட்டங்களையும், சட்டங்களையும் பாஜக அரசு திருத்தும் போது, இந்த நீட் தேர்வை மட்டும் திருத்துவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
நீட் விவகாரத்தில் பாஜக அரசின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எழுப்பிய இந்தச் கேள்வி அவையில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



