தமிழகத் தலைவர்களுக்கு டி.கே. சிவக்குமார் விடுத்த எச்சரிக்கை!

Advertisements

சாமராஜநகர் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கேள்விகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இது காவிரி விவகாரம் தொடர்பான பழிவாங்கும் செயலா என்ற சந்தேகமும் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் தமிழகத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த பேட்டி தான் தற்போது சமூக வலைதளத்தில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த எதிர்ப்புகளுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கும் தெரியும் என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கட்டும்; நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். அவர்களின் நிர்வாகத்தில் நான் தலையிட விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் இறையாண்மையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டி.கே. சிவக்குமாரின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக் கூடாது என்று கூறும் டி.கே. சிவக்குமார், தமிழகத்தின் காவிரி உரிமை விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாட்டை மட்டும் எப்படி நியாயப்படுத்துகிறார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்ற கருத்து ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தமிழகத்தில் கேள்விகள் எழுப்பப்படுவது எவ்வாறு மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடுவதாகக் கருத முடியும்? என்பதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்படும் கேள்வியாக உள்ளது.

காவிரி விவகாரத்திலும் இரு மாநிலங்களுக்கும் இடையே ஏற்கனவே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. காவிரி நீர் திறப்பு தொடர்பாக கர்நாடகா தனது விவசாயிகளின் நலனை முன்வைக்கிறது. அதே நேரத்தில், தமிழக விவசாயிகளுக்கான நீர் உரிமையை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தொடர்பான உத்தரவுகள் குறித்தும் இரு மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.

இதற்கிடையில், மேகதாது அணைத் திட்டமும் மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளது. மேகதாது திட்டம் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் பயனளிக்கும் என டி.கே. சிவக்குமார் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் காவிரி டெல்டா விவசாயிகளின் நீர் உரிமையை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை தமிழக தரப்பு தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியும் முன்னதாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது நிலவிய பதற்றமான சூழ்நிலையை காரணமாகக் கூறி அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் தற்போது முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது, அதாவது சாமராஜநகர் சம்பவத்தில் உங்கள் மாநிலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தமிழகத்திற்கு அறிவுரை கூறும் கர்நாடக அரசு, காவிரி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் உரிமையை எவ்வாறு அணுகப் போகிறது? மாநில உரிமை என்று வரும்போது கர்நாடகாவுக்கு ஒரு நியாயம்… காவிரி நீர் உரிமை என்று வரும்போது தமிழகத்திற்கு வேறு நியாயமா?

தற்போது இந்த இரண்டு விவகாரங்களும் தமிழகம்–கர்நாடகா இடையிலான மாநில உரிமை, நிர்வாக அதிகாரம் மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை மீண்டும் பதற்றமான நிலைக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் இரு மாநிலங்களுக்கிடையிலான அரசியல் பதற்றம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறதா? தமிழக அரசு என்ன பதிலடி கொடுக்கப் போகிறது?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத்தான் தற்போது தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சாமராஜநகர் சம்பவம் காவிரி நீர் விவகாரத்திற்காகவோ அல்லது மேகதாது அணைத் திட்டத்திற்காகவோ வெளிப்படுத்தப்பட்ட பழிவாங்கும் எண்ணத்தின் அடிப்படையில் நடைபெற்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *