மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென் மாநிலங்களுக்கு இடையேயான உறவைச் சுமூகமாகப் பேணும் வகையிலான 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு இரண்டு நாட்கள் கோவளத்தில் உள்ள ‘பிஷர்மேன்ஸ் கோவ்’ நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகை தருகிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டில், மாநிலங்களின் பாதுகாப்பு, அண்டை மாநிலங்களுக்கு இடையேயான சுமூக உறவு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


