“ஐரோப்பிய வணிக உடன்பாட்டால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்” – நார்வேயில் பிரதமர் மோடி பெருமிதம்…!

ஐரோப்பாவுடன் செய்துகொண்ட தடையற்ற வணிக உடன்பாட்டின் மூலம் இந்தியாவுக்குப் பத்தாயிரம் கோடி டாலர் முதலீடு கிடைக்கும் என்றும், அடுத்த 15 ஆண்டுகளில் பத்து இலட்சம்  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நார்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருடன் விரிவான பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுப் பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் பயணத்தை முடித்துக்கொண்டு நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்குச் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஓஸ்லோவில் பிரதமர் நரேந்திர மோடி, நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் ஆகியோரும் இருநாட்டுப் பிரதிநிதிகளும், இரு நாடுகளிடையே இப்போது பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சு நடத்தினர்.
அதன்பின் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், நலவாழ்வுத்துறையில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாகி உள்ளதாகத் தெரிவித்தார். தூதரக உறவுகள், வணிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆயுதமயமாக்கும் நாடுகள், போரிட்டு வரும் நாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தாங்கள் கொண்டுள்ளதாகக் கூறினார். உக்ரைனிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் நிலவும் சிக்கல் பற்றியும் தாங்கள் விவாதித்ததாகவும் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டே தான் நார்வே நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும், பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அந்தச் சுற்றுப் பயணம் ரத்துச் செய்யப்பட்டதாகவும் கூறினார். நல்ல நண்பனான நார்வே நம்முடன் உறுதியாக நின்று பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடும் நிலைப்பாட்டை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய தடையற்ற வணிக உடன்பாடு இந்திய நார்வே இடையே வளர்ச்சி முன்னேற்றம் வளம் ஆகியவற்றை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார். அந்த உடன்பாட்டின் மூலம் இந்தியாவுக்குப் பத்தாயிரம் கோடி டாலர் முதலீடு கிடைக்கும் என்றும், அடுத்த 15 ஆண்டுகளில் பத்து இலட்சம்  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *