காவல்துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் மீது புகார் அளிக்கச் சென்றதாகவும், அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் புகாரைப் பெறக் காவல்துறையினர் மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய காவல்துறையே அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவது சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்குள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் அமைச்சர் நிர்மல்குமாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை என்பது அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இயங்கும் அரசியல் கருவி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையில் முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட, முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




