திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தவெக அரசு இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்தால், ஆட்சியில் இருந்து தவெக அகற்றப்படும் என்று இந்து முன்னணித் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார், செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைஅவமதித்ததால் திமுக ஆட்சியை இழந்ததாகத் தெரிவித்தனர்.
இப்போது அதே தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நிலையில், தவெக அரசும் திமுகவின் இந்து விரோத நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர். அறநிலையத்துறையில் கோவில் வருமானத்தில் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதாகத் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், திமுகவைப் போல இந்து விரோத நடவடிக்கை எடுத்தால் தவெகவும் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் எனத் தெரிவித்தனர்.


