டெல்லி குடிநீர் வாரிய டெண்டர் முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் உட்பட ஆறு பேரை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
டெல்லி ஜல் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய், முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா, ஏஎன் எண்டர்பிரைசஸ் நாகேந்திர யாதவ், யூரோடெக் என்விரான்மென்ட் ராஜா குமார் குர்ரா மற்றும் ஸ்ரீஜன்ஹார் பங்கஜ் வர்மா ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஒப்பந்தங்களில் சுமார் 1.52 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும், ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக டெண்டர் நிபந்தனைகளில் முறைகேடுகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2024 மே மாதம் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பிறகு போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு, தற்போது அனைவரும் டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சத்யேந்தர் ஜெயினின் இந்தக் கைது நடவடிக்கை முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளை முடக்க பாஜக இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பாஜக ஆம் ஆத்மி கட்சிக்குப் பயப்படுகிறது என்பதற்கு இதுவே சான்று. சம்பந்தப்பட்ட டெண்டர் விடப்பட்ட காலகட்டத்தில் சத்யேந்தர் ஜெயின் சிறையில்தான் இருந்தார்; அவ்வாறிருக்கையில் அவர் எப்படிப் பொறுப்பேற்றிருக்க முடியும்? பஞ்சாப் மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், அங்கு அவர் இணைப் பொறுப்பாளராக இருப்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


