சீனாவுடன் பன்னாட்டு எல்லையைக் கொண்டிருக்கும் அருணாசலப் பிரதேசத்தின் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அருணாசலப் பிரதேசக் காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா இடாநகரில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
அப்போது காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், குடியரசுத் தலைவரின் கொடியை வழங்கிச் சிறப்பித்தார். விழாவில் உரையாற்றிய அமித் ஷா, இந்தியாவில் சூரியன் உதிக்கும் மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உள்ளதாகக் கூறினார். இதன் பாதுகாப்பு, அமைதி, செழிப்பு, வளர்ச்சி ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தார்.
1990களில் காஷ்மீரில் பயங்கரவாதம் நிலவியதாகவும், பாதுகாப்புப் படைகளின் துணிச்சலான செயல்பாட்டால் அது இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ஒழிக்கப்பட்டதால் அங்குப் பயங்கரவாதமும்பிரிவினைவாதமும் முற்றிலும் வேரறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அருணாசலப் பிரதேசத்தின் பாதுகாப்பு ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் அருணாசலப் பிரதேசம் முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.



