Advertisements

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. காரணம் மற்ற கட்சிகள் ஒன்றுக்கொன்று பிரிந்து இருக்கின்றன இதனை நான் சொல்லவில்லை மக்கள் சொல்கிறார்கள் என்று தெரிவித்தார் .
அவரது இந்த பேச்சுக்கு பின்னால் மிகப் பெரிய அரசியல் வெடி இருப்பதாக பார்க்கப்படுகிறது . ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்தவர் துணை முதலமைச்சர் பொறுப்பிலும் இருந்திருக்கிறார் .
இது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார் . சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என பல்வேறு பதவிகள் வைத்தவர்.
எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட மோதலில் கட்சியை விட்டு பிரிந்த ஓ பன்னீர்செல்வம் தனியாக அரசியல் நடத்தி வருகிறார் .
தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழ்நாட்டில் ஆங்காங்கே தேவர் இனத்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஓ பன்னீர்செல்வம் தற்பொழுது பாஜகவில் இருந்து விலகி விட்டார் .
அடுத்த கட்டமாக அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் கொடுத்த போது ஒருவேளை மீண்டும் அதிமுகவுடன் இணையலாம் என்ற முடிவில் இருந்தார் .
அதேசமயம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வந்தார். தற்பொழுது ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது அதிமுக பாஜக தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே அவரை புறக்கணித்து விட்டன.
எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் திண்டாடி வருகிறார். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஆன டிடிவி தினகரன் மிகப்பெரிய கூட்டணி சிக்கலில் இருக்கிறார் . கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார்.
கட்சி தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிறது இடைப்பட்ட காலத்தில் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவ்வப்போது போர்க் குரல் எழுப்பி வரும் டிடிவி தினகரனும் தமிழக வெற்றி கழகத்துடன் இணையலாம் என்று பேசப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இது குறித்து உடன்பாடு எதுவும் தெரிவிக்கவில்லை .
இந்த நிலையில் தேர்தல் மிகவும் நெருங்கி விட்டதால் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் டிடிவி தினகரன் இருக்கிறார் . ஏற்கனவே டிடிவி தினகரனும் ஓ பன்னீர்செல்வமும் தேவைப்படும் பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர் கைபேசியில் பேசி வருகிறார்கள். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது இதன் பின்னணியில் சசிகலாவும் இருப்பதாக சொல்லப்படுகிறது
இந்த நிலையில் டிடிவி தினகரனும் ஓ பன்னீர்செல்வமும் திமுகவில் இணையும் திட்டம் குறித்து திரை மறைவில் பேசப்பட்டு வருகிறது . தற்பொழுது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்தால் வருகிற தேர்தலில் வெற்றி கிடைக்காது இதன் மூலம் நாமும் தோல்வியைத்தான் தழுவ நேரிடும் என டிடிவி தினகரனும் ஓ பன்னீர்செல்வமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு சரியான கூட்டணி இல்லாததால் அவர்களும் தோல்வியை தழுவுவார்கள்.
எனவே இந்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் ஆகவே திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது சாத்தியமாக இருக்கும் என இருவரும் பேசி வருவதாக தெரிகிறது . இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வருகிற தேர்தலில் சரியான சாட்டையடி தரலாம் என பேசி வருகிறார்கள்.
இதன் நிமித்தமாகத்தான் கரூர் சம்பவத்தில் திமுக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தினகரன் எடுத்தார். அது மட்டுமல்லாமல் வருகிற தேர்தலில் நாங்கள் அங்கம் வகிக்கும் அணி தான் வெற்றி பெறும் என்று டிடிவி தினகரன் பேசி வருவது திமுக கூட்டணியை மனதில் வைத்துதான் பேசுகிறார் என தெரிகிறது.
இதனிடையே டிடிவி தினகரனிடம் விஜயுடன் கூட்டணியில் இணைவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார் டிடிவி தினகரன் . இது மட்டுமல்லாமல் துரோக சக்தியான எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவோம் என்றும் கூட்டணி தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிப்போம் .
வெற்றி பெறும் அணியில் நாங்கள் இருப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார் இதன் பின்னணியில் அவர் திமுகவை மனதில் வைத்து தான் பேசுகிறார் என்று தெரிய வந்திருக்கிறது . இதற்கிடையே டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் இணைத்துக் கொண்டால் அது திமுகவுக்கு பலமாகவும் அதிமுகவுக்கு பலவீனமாகவும் இருக்கும் என திமுக கணக்கு போட்டு இருக்கிறது.
எனவே இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த திமுக மேலிடம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் திமுகவில் இணைவதால் அது அதிமுகவுக்கு பின்னடைவு என சொல்லப்படுகிறது .குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் சமுதாயத்தின் வாக்குகள் திமுகவுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்து விடும் அதிமுகவை பொருத்த வரையில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் இல்லை என்பதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது பற்றிய தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரிய வந்திருக்கிறது ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள் . டிடிவி தினகரனுக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் மக்கள் செல்வாக்கு கிடையாது. எனவே அவர்கள் திமுகவில் இணைவதால் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்ற கணிப்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .
இதற்கிடையே தற்போதைய சூழ்நிலையில் ஓரணியில் இணைவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுத்தாலும் டிடிவி தினகரனும் ஓ பன்னீர்செல்வமும் அதற்கு சம்மதிக்க போவதில்லை என தெரிகிறது கிட்டத்தட்ட அவர்கள் திமுக பக்கம் 90 சதவீதம் சாய்ந்து விட்டார்கள் . தற்போதைய சூழ்நிலையில் திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக எழுச்சி பெற்று வரும் நிலையில் அதிமுக கூட்டணி வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
Advertisements



