நடிகர் சத்தியராஜ் குடும்பம் நீ … அந்த கட்சி நான் இந்த கட்சி.! 

Advertisements

ஒரே குடும்பத்தில் பல கட்சியைச் சேர்ந்தவர்கள் இருப்பது வழக்கமானதுதான். அந்த வகையில், தமிழகத்தின் பணக்கார குடும்பமான மார்ட்டின் குடும்பத்தில் அவரது மனைவி லீமா ரோஸ் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர். இந்த தம்பதியின் மகன் ஜோஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார்.

லீமா ரோஸின் மருமகன் ஆதவ் , தவெகவின் முக்கிய பொறுப்பாளர். இப்படி, ஒரே குடும்பத்தில் 3 பேர் பல கட்சிகளில் பயணிக்கின்றனர். இவர்களைப் போலவே, நடிகர் சத்தியராஜ் குடும்பத்திலும் இரு வேறு கட்சிகளின் குடும்பத்தினர் பயணிக்கின்றனர். அதாவது, சத்தியராஜின் மகன் சிபி இப்போது தவெக தலைவர் விஜய்க்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தேர்தல் களம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை தேர்தல் நடக்கும் சூழலில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.  திமுக.,வுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தார். அவரது மகளான திவ்யாவும் திமுக.,வில் தான் உள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கேட்டும் திவ்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனினும், அவரும் திமுக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  தன்னை எப்போதும் விஜய் ரசிகராக காட்டிக் கொள்ளும் சத்யராஜின் மகனான சிபிராஜ் எதிர்பார்த்ததுபோலவே  விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.நேரடியாக பிரசாரத்திற்கு செல்லாவிட்டாலும் இன்ஸ்டா போன்ற வலைதளங்களில் தவெக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வந்தார் சிபி.  குறிப்பாக சிங்காநல்லூர் வேட்பாளர் கிரிபிரசாத், வேளச்சேரி வேட்பாளர் குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நிச்சயம் நல்லது நடக்கும் என பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.தற்போது விஜய்க்கு ஆதரவாக சிபி கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில், விஜயுடன் தனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பு குறித்து உருக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.  ‛‛அன்புள்ள விஜய் அண்ணாவிற்கு…. 1993, அக்டோபர் 3 ம் தேதிதான் , நான் உங்களை முதன்முதலில் சந்தித்தேன்.

பொள்ளாச்சி சக்தி ஹோட்டல் டெர்ரஸில் எனது தந்தையின்  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எஸ்.ஏ.சி மற்றும் நடிகர் விஜயகாந்த் ஆகியோருடன் நீங்கள் வந்தீர்கள். அந்த எளிமையான இளைஞன் எதிர்காலத்தில் நான் உட்பட கோடிக்கணக்கான இதயங்களை வென்று, ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது எனக்குத் தெரியாது.‘
நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக மற்றும் நண்பனாக உங்கள் புதிய பாதைக்கான முடிவை மதிக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன். உங்களது வெற்றிகளை எனது சொந்த வெற்றியைப் போலவே நான் ரசித்து கொண்டாடினேன். கடந்த காலங்களில் உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள், உணவு சாப்பிட்டது, போன் செய்தாலோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பினாலோ நீங்கள் உடனடியாக அளிக்கும் பதில்கள் இவை அனைத்தும் என் வாழ்வின் போற்றத்தக்க நினைவாகவே இருக்கும்.

நான் சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், நான் சினிமா உலகிற்குள் நுழைய நீங்களே உந்துதலாக இருந்தீர்கள். உங்கள் படங்கள் பொழுதுபோக்காக பார்க்கப்பட்டாலும், அவை எனக்கு உண்மையான அன்பு, நட்பு, தன்னம்பிக்கை, சுயமரியாதை, முடிவெடுக்கும் திறனை கற்றுக்கொடுத்தன. ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்’ – இது வெறும் சினிமா வசனம் மட்டுமல்ல, நீங்கள் வாழும் தத்துவம் என்பதையும், எங்களை அவ்வாறு வாழத் தூண்டும் மந்திரம் என்பதையும் பல ஆண்டுகளாக நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இப்படி சிபி, நடிகர் விஜயின் புகழை பாடியுள்ளார். இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கிறிஸ்தவர்களுக்கு எதிரான, தேவாலயங்களை இடிக்கிற கட்சியாக பாஜக இருக்கிறது. வெறுப்பை பரப்பி, மதவெறி அரசியல் செய்யும் கட்சியாக பாஜக இருக்கிறது. இப்பேற்பட்ட கட்சியை தோளில் தூக்கி வளர்க்கும் கட்சியாக அதிமுக உள்ளது. அந்த கட்சிக்கு மறைமுகமாக துணைபோகிறவர்தான் விஜய்” என்று சாடியுள்ளார்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், கிறிஸ்துமஸை கொண்டாடிய சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.ஆனால், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் விஜய், இந்த சம்பவங்களை கண்டித்து போராட்டங்களை நடத்தாதது ஏன்? அப்படிப்பட்டவர், தற்போது சர்ச்சில் முட்டி போட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்திருப்பது, வெறும் வாக்கு வங்கி அரசியல்தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *