Advertisements

கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுக சார்பில் எம்எல்ஏவாகவும் பின்னர் அமைச்சராகவும் பணியாற்றியவர். இதன் பின்னர் சில காரணங்களால் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார் .
இதனைத் தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் ஆதரவாளராக மாறினார். பின்னர் , அவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார் .
திமுகவில் இணைந்த அவருக்கு உடனடியாகவே முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன முதலில் கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் பின்னர் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார் . இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முக்கிய தலைவரான அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .
இது செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது இதனை தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் மின்சாரம் போன்ற முக்கிய துறைகள் அவருக்கு வழங்கப்பட்டு அமைச்சர் பொறுப்பேற்றார் . கொங்கு மண்டலம் முழுவதும் திமுக சார்பில் அதிரடி மாநாடுகள் ஆலோசனைக் கூட்டங்கள் என செந்தில் பாலாஜி எடுத்த நடவடிக்கைகள் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது .
இதனைத் தொடர்ந்து கோவை மண்டல பொறுப்பாளராகவும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார் . முன்னதாக கோவை மாவட்டம் முழுவதும் அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வந்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டு என மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கோவையில் உள்ள 10 தொகுதிகளை அதிமுக வென்றது .
குறிப்பாக எஸ்பி வேலுமணி போன்ற தலைவர்கள் சமூக செல்வாக்கு மற்றும் ஆதரவால் கோவையை அதிமுகவின் கோட்டையாக மாற்றி வைத்திருந்தார்கள் . இதனிடையே கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவையில் முழுமையான வெற்றி பெற்ற திமுக 2006 ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டு ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை இதை போல் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது .2021 தேர்தலிலும் திமுக ஒரு இடத்தை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் கோவையில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது .
தற்போது வழக்கில் சிக்கி சிறை சென்று வந்திருந்தாலும் கோவை மற்றும் கரூரில் இன்னும் அமைச்சருக்கு இணையான அதிகாரம் கொண்டவராக செந்தில் பாலாஜி திகழ்ந்து வருகிறார் . தற்பொழுது கோவை நீலகிரி திருப்பூர் நாமக்கல் ஈரோடு கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 39 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருக்கிறார் .
தற்போதுள்ள சூழ்நிலையில் 39 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை செந்தில் பாலாஜி தான் முடிவு செய்வார் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது . இலன் எதிரொலியாக வட்டச் செயலாளர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை தற்போது செந்தில் பாலாஜியை சூழ்ந்து நிற்கிறார்கள் .
இதே சமயத்தில் கட்சிக்கு நேற்று வந்த செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவமா என ஏராளமான திமுக சீனியர்கள் தற்பொழுது போர் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் . முதல் கட்டமாக திமுக முன்னாள் அமைச்சரான என் கே கே பி ராஜா செந்தில் பாலாஜிக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.
ஈரோட்டை பொருத்தவரையில் என் கே கே பி ராஜா அமைச்சராக இருந்ததோடு அவரது தந்தையும் அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது . பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . அதிமுகவை சேர்ந்த முத்துச்சாமி செங்கோட்டையன் ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
ராஜா குறிப்பிடும் பொழுது செந்தில் பாலாஜியின் சுவரொட்டிகள் அனைத்திலும் கலைஞர் படமும் முதல்வர் படமும் சிறிய அளவில் இருக்கிறது . அந்த அளவிற்கு செந்தில் பாலாஜி தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்கிறார். அவருக்கு பின்னால் ஒரு கூட்டம் ஜால்ரா போடுகிறது என்று குரல் கொடுத்திருக்கிறார் .
இது மட்டுமில்லாமல் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்படுபவர்களை அவர் ஏண்டா மூளை கெட்டுத் தெரிகிறீர்கள் முதலில் ஜெயிக்க சொல்லுங்கடா பார்க்கலாம்.. கலைஞர் முதல்வரை விட செந்தில் பாலாஜி பெரிய ஆளா ஏன்டா டேய் இதுக்கு கூட ரோசம் வரலைன்னா அப்புறம் எதுக்குடா கருப்பு சிவப்பு கொடி கட்டுறீங்க மனுசனா திமுக காரனா இருக்கணும்னு யோசிங்க ரொம்ப அசிங்கமா போகுது என்று வாய்ஸ் மெசேஜ் போட்டு இருக்கிறார் .
இது வைரலாகிய நிலையில் ஏராளமான அமைச்சர்களும் செந்தில் பாலாஜிக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் . கட்சியில் செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.நாங்கள் எல்லாம் கலைஞர் காலத்தில் சிறை சென்று வந்தவர்கள் செந்தில் பாலாஜிக்கு என்ன வரலாறு தெரியும் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் .
முதலமைச்சர் மு க ஸ்டாலின் செந்தில் பாலாஜியை வலதுகரமாக பயன்படுத்தி வரும் நிலையில் அவருக்கு எதிராக திமுகவில் எழுந்துள்ள போர்க்கொடி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . இந்த சூழ்நிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Advertisements


