
இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வரி குறைப்பு மற்றும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், பிரதமர் மோடி தனது மிகச்சிறந்த நண்பர் என்றும் அவருடன் பேசியதை பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார்.
ரஷியா எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இது ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவுடனான தங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.



