mkstalin:’தமிழ்ப் புதல்வன்’ திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு!

Advertisements

தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

சென்னை:புதுமைப்பெண் திட்டம்போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்புவரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம்வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

அதன்படி இந்தத் திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுவதால் இந்தத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, மாணவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் ஆதார் அட்டை பெற பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் ஆதார் மையம் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *