
ஆட்சியை கைப்பற்றப்போவது யார், மக்கள் தீர்ப்பு என்ன என்பதை அறிய, இன்று வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள், மக்கள் தீர்ப்பு என்ன என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப்போட்டி நிலவியது.
இந்த சூழலில், புதிதாக களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவில் வாக்குகளை பிரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்குமா, அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுமா, விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா, அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா, என்ற கேள்விகளுக்கு நாளை தெளிவான பதில்கள் கிடைத்துவிடும்.
இந்நிலையில், சென்னையை பொறுத்தவரை ராணிமேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி என 3 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாநகர பகுதி முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


