
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், இந்த ஆளுநர் உரையின் மீது ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.
இந்நிலையில், ஆளுநர் உரையாற்றி முடித்த பிறகு சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும், திமுக முதன்மைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், இந்த ஆளுநர் உரை தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது தவெக தரப்பில் தங்களது தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களையும், மக்கள் நல வாக்குறுதிகளையும் அள்ளி வீசியிருந்தார்கள். அந்த அறிவிப்புகளை எல்லாம் புதிய அரசு எந்தக் காலக்கட்டத்திற்குள், எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது குறித்த முறையான வழிகாட்டுதல்களும், அறிவிப்புகளும் இன்றைய ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று நாங்கள் பெரிதும் எதிர்பார்த்தோம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த உரையில் அதுகுறித்த எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லை. இது எங்களுக்கு மட்டுமன்றி, இந்த அரசை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். அப்போது, தங்களின் சட்டைகளில் “வாயை திறங்க CM” என்ற வாசகங்கள் அடங்கிய பேட்ஜ்களை குத்தியிருந்தனர்.
அதேபோல, கைகளில் பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பதாகைகளில், “தூய சக்தி அல்ல துயர சக்தி”, “கதறல் கேட்குதா CM?”, “திரையில் நாயகன், தரையில் வில்லன்”, “REELS இங்கே REALS எங்கே?”, “மாற்றம் அல்ல இது ஏமாற்றம்” மற்றும் “வாயில் ஏதாவது வருமா CM?” போன்ற முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன.


