
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசப் பயங்கரவாத அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மிகப்பெரிய பயங்கரவாதச் செயல்களைச் செய்யத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரைத் தில்லிக்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றுள்ளனர்.
தில்லி செங்கோட்டையிலும், புகழ்பெற்ற கோவில்களிலும் தாக்குதல் நடத்தச் சதி செய்ததாகப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசப் பயங்கரவாத அமைப்புகள் ஆகியோருடன் தொடர்புடைய 8 பேரைத் தில்லிக் காவல்துறையினர் நேற்றுக் கைது செய்துள்ளனர். இவர்களில் 6 பேர் தமிழ்நாட்டின் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தவர்கள் ஆவர்.
மத்திய உளவுத்துறைத் தகவலின் அடிப்படியில் தில்லிக் காவல்துறையினர் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் பின்னலாடை நிறுவனங்களில் தங்கி வேலை செய்து வந்த ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். தங்களின் அடையாளத்தை மறைக்க இவர்கள் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதேபோல் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான கருத்துக்களைப் பகிர்ந்து வந்ததும், வெளிநாட்டுப் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டுப் பேரையும் மேலும் விசாரணைக்காகத் தில்லிக்குக் கொண்டுசென்றுள்ளனர். இதையடுத்துத் தில்லி செங்கோட்டை, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முதன்மையான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கண்காணிப்த் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



