
தமிழ்நாட்டில் தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இது குறைவானது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவான விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட விளக்கத்தில், 2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை உண்மையில் செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திமுகவின் கடைசி இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத போதிலும், பல ஊதிய வரம்புகளும் செலவினங்களும் தவறான கணக்கீடுகள் மூலம் மிகை மதிப்பீடு செய்யப்பட்டு 48,534 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காரணமற்ற இந்த நிதி உயர்வுகளைத் தவெக அரசு முறையாகச் சரிசெய்து, கடந்த ஆண்டு உண்மையாகச் செலவிடப்பட்ட தொகையை விட சுமார் 2,176 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்தியுள்ளார். நிதித்துறை செயலாளரின் முறையான விளக்கத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடானது, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி திறம்படக் கையாளப்பட்டு, பள்ளிக்கல்வி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை முழுமையாகச் சென்று சேர்க்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.


