அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி தங்களுக்கு ஐந்து இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பேச்சு நடத்தும் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் ஜவாகிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ஜவாகிருல்லா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சிப் பிரதிநிதிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்துக்குச் சென்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்தினர்.

அவர்கள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்தும் குழுவினருடன் பேச்சு நடத்தினர். அப்போது 2021ஆம் ஆண்டு தேர்தலில் தங்கள் கட்சி திமுக கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றதைச் சுட்டிக்காட்டினர். இம்முறை தங்களுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதற்குத் திமுக குழுவினர் இது குறித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
பேச்சு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாகிருல்லா, பேச்சு முடிவடையவில்லை என்றும், இரண்டாம் கட்டமாக ஸ்டாலினுடன் பேச்சு நடத்தப்போவதாகவும் ம் தெரிவித்தார். மனிதநேய மக்கள் கட்சிக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம் லீக், திமுக என்று மொத்தத்தில் 16 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக ஜவாகிருல்லா தெரிவித்தார்.

திமுக கூட்டணிக்காகத் தமிழ்நாடு முழுவதும் தாங்கள் பரப்புரை செய்ய உள்ளதாகவும், வரும் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் ஜவாகிருல்லா கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *