
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (67). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த சுழலில், நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் அதே ஊரை சேர்ந்த கந்தன் என்பவரின் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் பக்கில் பிள்ளையார்குப்பத்தில் இருந்து மாளிகம்பட்டு நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக ஒரு கார் வந்ததாக கூறப்படுகிறது. கார் வேகமாக வந்ததை பார்த்த கந்தன், முதியவரை கீழே இறக்கிவிட்டு பைக்கையும் நடுரோட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம்.இந்த நிலையில், காரில் வந்த மர்ம நபர்கள் முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் முதியவர் ராஜேந்திரன் படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக சிசிடிவி கேமராவின் உதவியோடு பண்ருட்டி காடாம்புலியூர் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் . இந்த நிலையில் காரை ஓட்டி வந்த பார்த்திபன் என்பவரை கைது செய்து காவல் துறை விசாரணை செய்ததில் பண்ருட்டி பகுதியைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் குபேந்திரன் என்ற இருவர் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன் மற்றும் குபேந்திரன் இருவரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேந்திரனின் மருமகள் ஜெயப்பிரியா என்பவருக்கும் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதற்கு ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் ஜெயப்பிரியா மற்றும் மணிகண்டன் இருவரும் திட்டம் போட்டு குபேந்திரன் உடன் சேர்ந்து ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்ள முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதை அடுத்து ஜெயப்பிரியா மணிகண்டன் குபேந்திரன் வாகன ஓட்டுனர் பார்த்திபன் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததால் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி,உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி,இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.
இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


