தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – இபிஎஸ் விமர்சனம்!

தவெக தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது பற்றிப் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும், முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக்காலத் திட்டங்களைப் பெயர் மாற்றி அறிவித்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2026 – 2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைச் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.  இதில் தாய்மாமன் சீர், அண்ணன் சீர் எனப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், சட்டமன்றத் தேர்தலின்போது தவெக அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட திட்டங்கள் பற்றி அறிவிப்பு இல்லை.

இந்நிலையில் தவெக அரசின் பட்ஜெட் குறித்துச் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தவெக தேர்தலின்போது கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றித் தவெக அரசு புதிய அறிவிப்பு போல் வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *