OPS: மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

Advertisements

அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாக பிரிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக தாக்கல் செய்த உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கேட்டிருந்தார்.
அதன் மீதான விசாரணையில், எத்தனை முறை இப்படி வாழ்க்கு தொடர்வீர்கள்..? நேரம் கேட்பீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் மேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *