
ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கார்த்திகாவின் கோரிக்கைப்படி சென்னை கண்ணகி நகரில் சிந்தடிக் கபடித் திடலைத் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைப்பார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் கார்த்திகாவுக்குச் சென்னை கண்ணகி நகரில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கண்ணகி நகரில் கட்டப்பட்டு வரும் கபடித் திடலை சிந்தடிக் திடலாகக் கட்டி முடித்து அதைத் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
பாராட்டை ஏற்றுக்கொண்டு பேசிய கபடி வீராங்கனை கார்த்திகா, தனக்கு உதவிய பயிற்சியாளருக்கும் கண்ணகி நகரைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

