உலக அறிவியல் தினம்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி அன்று “அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் UNESCO நிறுவனத்தால் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய வாழ்வில் அறிவியலின் முக்கியப் பங்கு குறித்தும், அதனுடைய அசுர வளர்ச்சி குறித்தும் நம் அனைவருக்கும் தெரிந்ததே.
நகைச்சுவை நடிகர் N.S. கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடும் விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி பெண் ஜாதி புருஷன் இல்லாமல் புள்ளக் குட்டியும் பொறக்குறாப்புல விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி .
அஞ்ஞானத்தை அழிக்கப் போறேண்டி பாடலில் பட்டனைத் தட்டிவிட்டால் தட்டிலே ரெண்டு இட்டிலியும் மாவு அரைச்சி கொடுக்கவேணும், துணி துவைக்க வேணும், நெல்லுக்குத்த மாவரைக்க நீர் இறைக்க மிஷினு அல்லும் பகலும் ஆக்கி அடுக்க அதுக்கொரு மிசினு..
அறிவியல் இன்று தரையில் தவழ்ந்த காலம் போய் வானில் சந்திரனில் கால் பதித்து சாதித்துக் காட்டியுள்ளது. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அறிவியலும், தொழில்நுட்பமும் நொடிக்கு நொடி மாற்றி கொண்டு வருகிறதென்றால் அது மிகையில்லை. ஒரு காலத்தில் விளக்கேற்ற எண்ணையை பயன்படுத்தினோம் . அதற்காக ஒரு எண்ணெயை ஒதுக்கி விளக்கெண்ணெய் என்று பெயரிட்டு பயன்படுத்தினோம் .
இன்று எண்ணெயை பயன்படுத்தி விளக்கு எரித்து வெளிச்சம் தேடாமல் மின்விளக்கு கொண்டு பகல் போல வெளிச்சம் உண்டாக்கி வாழுகிறது மனிதகுலம் . சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விசயங்கள் இன்று அறிவியலின் துணையால் நனவாகி வருகின்றன. இன்று உலகின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலையில் உள்ள ஒருவரிடம் நொடியில் அலைபேசி மூலம் நேரிலே பேசுவது, பார்ப்பது போன்று உரையாட முடியும்.
அறிவியல் வளர்ச்சி இன்றைக்கு விண்ணைத்தாண்டி சென்று கொண்டு இருப்பது கண்கூடு. கால் நடையாய் நடந்த காலம் எல்லாம் மலையேறிப்போச்சு. சில மணி நேரங்களில் நாடு விட்டு நாடு பறந்து செல்வது எளிதாகிவிட்டது . மாட்டு வண்டியில் தொடங்கிய பயணம் இன்று விமானம் மூலம் விண்ணுக்கு செல்லும் வரை…
அதேபோல் விவசாயத்தில் மாடு பூட்டி ஏர் உழுத காலம் போய் விளைச்சல் முதல் அறுவடை என்ன சந்தைக்கு கொண்டு வரும் வரை எல்லாம் இயந்திர மயம்..மின்சாரம் தான் எல்லா தொழிலுக்கும் அடிப்படை சாரம். ஆக்கபூர்வமான அதி அற்புத கண்டுபிடிப்புகள், அழகு, ஆடை, இல்லம், எதிலும் எங்கும் அறிவியல்..
அழிவுக்கும் வழிவகுக்கும் அணுகுண்டு. அது ஒரு ஆற்றல் மிக்க அற்புத சக்தி. அதை இன்று மனித குலத்தை அழிக்கும் அநாகரீக கும்பல் பயன்படுத்துகிறது. மனிதநேயத்துடன் ஆக்கத்திற்கு அதை பயன்படுத்தினால் இந்த உலகமே பிரகாசமாக இருக்கும். பசி, பிணி அகலும். அனைவருக்கும் உணவு கிடைக்க செய்யலாம். வேலை வாய்ப்பை உருவாக்கலாம். துன்பம் துயரமற்ற வாழ்வை உறுதி செய்யலாம்.
இதன் விளைவு மனித குல அமைதியின்மை. இவர்கள் அறிவியல் மனப்பான்மையை அற்றவர்களாக, அன்பையும், அமைதியையும், கருணையையும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். வெள்ளை புறாக்களை பறக்க விடுவதும் அதை தொடர்ந்து சென்று வேட்டையாடுவதும் உலகின் வழக்கமாக மாறி பூமிப்பந்தை சிதைக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். அறிவியல் மனப்பான்மை கொண்ட அடிப்படைவாத சிந்தனைகள் அற்ற மனித குலத்தை உருவாக்க உலக அறிவியல் தினத்தில் போரை கைவிடுத்து அமைதியான உலகை அமைத்து ஆனந்தமாக வாழ வழி செய்வோம்.