Advertisements
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் கன்னியாகுமரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 17ம் தேதியில் இருந்து தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை ,திருவரூர், தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராம்நாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரத்தில் செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் திருப்பூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.