
தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 717 அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடிதடி, வெட்டு குத்து, கொலை கொள்ளை, கும்பல் வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகிய அனைத்துக் குற்றங்களுக்கும், சாலை விபத்துக்களுக்கும் முதன்மைக் காரணமாக அரசு மதுக்கடைகளை உள்ளதாகவும், இதனால் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், போதைப்பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து முழு மதுவிலக்கை அறிவிக்காமல் வேறு எந்தப் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தப் போகிறார் என்று பல்வேறு பிரிவினரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து ரயில் நிலையங்களில் இருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 கடைகள் என மொத்தம் 717 மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




