
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட சீனிவாச சேதுபதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 375 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பெரியகருப்பன் 83 ஆயிரத்து 374 வாக்குகளும் பெற்றுள்ளதாகவும், இதனால் தவெக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு வரவேண்டிய அஞ்சல் வாக்குகள் தவறுதலாக வேலூர் மாவட்டத்தின் அருகில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்றதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை அறிந்த திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்த் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்துக்கு வர வேண்டிய அஞ்சல் வாக்குகள், வேலூர் மாவட்டம் அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்த் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்”.
அந்த வாக்குகளைக் கொண்டு வந்து எண்ணிப்பார்க்கும் முன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றிபெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தவெகவின் சீனிவாச சேதுபதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம் தனது உத்தரவை நிறுத்தி வைத்தது. இதனிடையே தவெகவின் சீனிவாச சேதுபதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நிறுத்தி வைத்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிவகங்கை திருப்பத்தூர்த் தொகுதியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாசன் பங்கேற்கத் தடை விதித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் சிவகங்கை திருப்பத்தூர், வேலூர் அருகில் உள்ள திருப்பத்தூர் இரண்டு தொகுதிகளின் அனைத்து அஞ்சல் வாக்குகளையும் கட்டாயம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவுகளையும் கட்டாயம் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


