
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆரணியில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சியினர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட புதிய நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் கே.வரதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத் தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு. உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்தும், பல்கலைக்கழக வேந்தராக, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆரணி பஜார் வீதியில், தமிழ்நாடு கட்டுமான நலவாரியத் தலைவர் பொன்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராஜன், ஜெகதீசன், மூர்த்தி,ரஜினி-ராஜ், புருஷோத்தமன், பத்மநாபன், ஜனகராஜ், பிரகாஷ், கோபி, ஜெயராமன்,அருள், குமரேசன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
