
கோவை:
திமுகவின் தேச விரோத முகம் அம்பலமாகிவிட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சமடைந்திருக்கிறார். ‘ஒரே குடும்பம்’ தான் திமுகவின் ‘ஒரே கொள்கை’ என்று பாஜக மகளிர் அணி மாநில தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக மகளிர் அணி மாநில தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளது, ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் அணி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,” ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்’ மூலம், ஒற்றையாட்சி முறையை உருவாக்கப் பாஜக முயற்சிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக மாற்றவே இந்தத் திட்டம் பயன்படும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாது, ‘ஒரே நாடு’, ‘ஒரே மதம்’, ‘ஒரே மொழி’ என்று பாஜக அரசு பயணிப்பதாக எப்போதும் சொல்லும் அதே குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
அடிக்கடி ஆட்சி கவிழும் நிலையைத் தவிர்த்து, அரசியல் நிலைத் தன்மையை உருவாக்கவும், செலவுகளைக் குறைத்து, நாட்டின் வளர்ச்சியை விரைவு படுத்தவும்தான், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தைப் பாஜக கூட்டணி அரசு முன் வைத்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் என்பது இந்தியாவுக்கு புதிதல்ல.
1952 முதல் 1967 வரை நாடாளுமன்றத்திற்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்து வந்தது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை, சர்வாதிகார காங்கிரஸ் அரசு கலைக்கத் தொடங்கிய பிறகுதான் தேர்தல் என்பது அடிக்கடி நடக்கும் ஒன்றாகிவிட்டது.
நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்போது தான், தமிழகத்தில் திமுகவும், கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியைப் பிடித்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தேசிய கட்சி தான் வெற்றி பெறும் என்ற திமுகவின் வாதம் தவறானது.
