
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும், தங்கள் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க. கூட்டணி அமைத்துப் போட்டியிட இரு கட்சித் தலைவர்களும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். கூட்டணி அமைப்பதற்காக அ.தி.மு.க. தங்களிடம் எந்த நிபந்தைனையும், கோரிக்கையும் வைக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், அ.தி.மு.கவின் உள் விவகாரங்களில், பா.ஜ.க. தலையிடாது என்றும், இந்தக் கூட்டணியால் இரு கட்சிகளும் நன்மையடையும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு, ஆட்சியமைத்த பின், அமைச்சர் பதவிகள் ஆகியன குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஊழல், முறைகேடுகளை, மறைப்பதற்காகவே, மும்மொழிக் கொள்கை, சனாதன தர்மம் ஆகியவற்றைக் கூறி, மக்களைத் தி.மு.க. திசை திருப்புகிறது என அமித்ஷா தெரிவித்தார். மேலும், தமிழ் மொழிக்காகப் பாடுபடுவதாகக் கூறி வரும் தி.மு.க, தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளது என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார். செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுக சார்பில் வேலுமணி, முனுசாமி ஆகியோரும், பாஜக சார்பில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்
