Election Bonds: தேர்தல் பத்திர எதிர்ப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

Advertisements

அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பெருமளவு நன்கொடையைப் பெற்று குவித்தன.

புதுடெல்லி: கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காகச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்தப் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தைப் பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

தேர்தல் பத்திரங்கள் திட்டம், ரொக்கமாக நன்கொடை அளிக்கும் நடைமுறையை மாற்றுவதற்கும், அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வாகக் கருதப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது என்பதால், மக்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத்திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள்மூலம் பெருமளவு நன்கொடைகளைப் பெற்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பெருமளவு நன்கொடையைப் பெற்று குவித்தன. குறிப்பாகப் பா.ஜ.க. அதிக அளவிலான நன்கொடையைப் பெற்றுள்ளது.

ஆனால், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்தத் திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை, யாருடைய உரிமையும் மீறப்படவில்லையென மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்து கடந்த நவம்பர் 2-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருமித்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

அரசைக் கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறி உள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தெரிவிக்கவில்லை. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். தேர்தல் பத்திரம் விநியோகிப்பதை உடனே நிறுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *