
“நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் யூடியூபில் இதுவரை பதிவேற்றம் செய்த அனைத்து வீடியோ பதிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அண்மையில் சோதனை நடத்திய நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 2 நபர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சிக்குத் தொடர்புடைய நபர் என்பது தெரியவந்ததை அடுத்து, பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன், முருகன், விஷ்ணு, மதிவாணன், கார்த்திக் ஆகிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக விடுதலை புலிகளுக்குத் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 5 பேருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி, 2 நாட்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டது. பல தகவல்களை அவர்களிடம் வாக்குமூலமாகப் பெற்று அதனை என்ஐஏ அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். அப்போது தொடர்ச்சியாக வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவர் நாம் தமிழர் நிர்வாகிகள் 5 பேரிடம் பேசியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் யூடியூப் வைத்திருந்த நபர்களை மட்டுமே தொடர்ச்சியாக வெளிநாட்டில் இருக்கும் நபர் தொடர்பு கொண்டு இருந்தது தெரியவந்ததை அடுத்து, சாட்டை துரைமுருகன் அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்த அனைத்து வீடியோக்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இன்று காலைப் புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜரான சாட்டை துரைமுருகன், யூடியூபில் பதிவேற்றம் செய்த அனைத்து வீடியோ பதிவுகளையும் சமர்ப்பித்துள்ளார். மேலும் மற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நால்வரும் நேரில் ஆஜராகி அவர்களது யூடியூப் வீடியோக்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


