
கோவைக்கு வந்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க சென்ற அண்ணாமலைக்கும், விமானநிலைய அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், , ‘இது உன் அப்பன் வீட்டு ஏர்போர்ட்டா?’ என அண்ணாமலை கேட்டதோடு, நான் யார் என்று விரைவில் காட்டுகிறேன் பார் என மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் வரும் 23ம் தேதி என்பதால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத் தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ்கோயல் போன்றவர்களும் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 18ம்தேதி நள்ளிரவு கோவை விமான நிலையம் வந்த அமித் ஷா வரவேற்க சென்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் கட்சி நிர்வாகிகள் சென்றுள்ளனர். அங்கு தன்னைப் போலவே ஒன்றிய அமைச்சரை வரவேற்க வந்திருந்து அனுமதி கிடைக்காமல் விமான நிலையத்தின் வெளியில் காத்திருந்த முன்னாள் விளையாட்டு வீரர் வேணுகோபால் வர்மா என்பவரை உள்ளே அனுமதிக்குமாறு விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி மனு மேத்யூ என்பவரிடம் அண்ணாமலை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அதிகாரி மேத்யூ, முன்னரே நீங்கள் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்று அதிகாரி கூறியுள்ளார். உடனே அண்ணாமலை, நான் கடிதம் தருகிறேன் அவரை உள்ளே அனுப்புங்கள் என்று மிரட்டல் தொனியில் பேசியதாக தெரிகிறது. அதற்கு அந்த அதிகாரி, உங்கள் கடிதம் எல்லாம் செல்லாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கேட்டதும், கோபமடைந்த அண்ணாமலை, ‘இது உன் அப்பன் வீட்டு ஏர்போர்ட்டா?’ என சத்தமாக கடுமையான வார்த்தைகளால் அர்சனை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ‘ விரைவில் நான் யார் என்று காட்டுகிறேன்’, என்று மிரட்டலோடு ‘அடுத்த சம்பளம் வாங்க இங்க இருக்க மாட்ட’ போன்ற வார்த்தைகளில் அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பாஜகவின் கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ் குமாரிடம் ‘நாளை அதாவது இன்று அனைத்து டாக்ஸி டிரைவர்களையும் ஒன்று திரட்டி முற்றுகையிடச் சொல்லுங்கள், யார் என்ன செய்வார்கள் பார்க்கலாம்’ என மிரட்டும் விதத்தில் பேசியதை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரி மேத்யூ அவ்விடத்தில் இருந்து விலகி சென்றுள்ளார்.
உடனே ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வந்த விமானம் தரை இறங்கி விட்டதால் அதிகாரி அவரை வரவேற்க சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதப் பொருளாகி உள்ளது.



