பிரதமர் மோடி கூறிய கருத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கூறியதாக ராபின்வுட் ராகுல்காந்தி திரித்து வருகிறாரெனப் பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுமதி வெங்கடேசன், “ஜாதி கணக்கெடுப்பு எடுப்பதுடன் சேர்த்து பொருளாதார ரீதியான கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி ஜாதி கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை எதற்கு எடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருவரின் பொருளாதாரம் என்பது அவரது உழைப்பால் சேர்க்கப்பட்டது. அவரது உழைப்பை எப்படி பிறருக்கு பிரித்துக் கொடுக்க முடியும். 2006ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இதே போன்று ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதையேதான் இப்போது ராகுல்காந்தியும் சொல்கிறார். தேர்தல் அறிக்கையிலும் இதை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களது இந்தக் கருத்து பதிலளித்த பிரதமர், காங்கிரஸார் பிரித்துக்கொடுக்கும் பொருளாதாரம் ஊடுருவல்காரர்களுக்கு சென்று சேர்ந்துவிடுமோ எனதான் கேள்வி எழுப்பினார். ஆனால் அதை இஸ்லாமியர்களுக்கு எதிராக எதிர்க்கட்சினர் திசை திருப்பிக் குற்றம்சாட்டுகின்றனர். ஊடுருவிகாரர்கள் என்பவர்கள் நம்நாட்டின் குடிமக்கள் கிடையாது. வங்கதேசத்தில் இருந்தோ, ரோஹின்யாவில் இருந்தோ வருபவர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
உலக அளவில் 54 நாடுகள் ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்பியுள்ளது. இலங்கை தமிழர்களை இவர்களுடன் நாங்கள் சேர்க்கமாட்டோம். மறுபுறம் அவர்கள் என்னதான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் மோடியெனத் திசைதிருப்பினாலும் கண்டிப்பாகப் பாஜக 3வது முறை ஆட்சியைப் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.


