
“தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கு எதிரான முக்கிய வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காகப் பெற்ற 15 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இதுதொடர்பாக காவல்துறை FIR பதிவு செய்யவும், அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு நீதிபதிகள், முதல்வர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வருமான வரி விவகாரங்கள் சட்டப்பூர்வ மேல்முறையீட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.”


