உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்.!

உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பான பிக்கியின் நூற்றாண்டு விழா, ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஆகியன தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். பிக்கியின் நூற்றாண்டையொட்டிச் சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிக்கி நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஒரு காலத்தில் தொழில்களுக்கு உரிமம் வழங்கும் ஆட்சி நடைபெற்றதாகவும்,  அதன்பிறகு நாட்டுடைமை ஆக்கும் பரிசோதனை தோல்வியடைந்ததாகவும், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் நொறுங்கப் போகும் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்தச் சூழலை மாற்றக் கடந்த 12ஆண்டுகளில் நமது இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், தொழில் தலைவர்கள் மிகவும் கடினமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். அண்மையில் வெளியான உலக வங்கியின் அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவின் மக்கள் தொகை 50 கோடியாக இருக்கும்போதே இதைச் செய்திருக்க வேண்டும் என்று கூறினார். 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இன்று உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குவதாகவும், அக்டோபரில் ஐயாயிரம் கோடி டாலர் மதிப்புக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *