தவெக நிர்வாகிகள் எல்லை மீறி அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்காகத் தவெகவினர் தண்ணீர் திறந்து விட்டதைக் கண்டித்தார். நீர்வளத்துறை அதிகாரிகள் அரசின் ஒப்புதலின் அடிப்படையில்தான் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பது வழக்கம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக நிர்வாகிகள் எல்லை மீறி அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் பாலியல் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை என்றும், அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பொதுவெளியில் வந்து மக்களைச் சந்தித்தால்தான் அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது முதலமைச்சருக்குத் தெரியவரும் என்றும் கூறினார்.
தமிழக மக்களின் பிரதானப் பிரச்சினையாகக் காவிரி நீர் விவகாரம் இருக்கும் நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் உரிய முறையில் குரல் கொடுத்து எடுத்துரைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


