Delhi Liquor Policy Case: கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. அமலாக்கத்துறை விளக்கம்!

Advertisements

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் ,”மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளது. லஞ்சம் அளித்தவருக்கு ரூ.195 கோடி லாபம் கிடைக்கும் வகையில், அவருக்குச் சாதகமாக மதுபான கொள்கையில் திருத்தம் செய்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வலுவான ஆதாரம் இருந்த காரணத்தினால் தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அரசியல்வாதி என்பதற்காக அவருக்குச் சலுகை காட்ட முடியாது.

மதுபானக் கொள்கை முறைகேடு நடந்தபோது கெஜ்ரிவால் 170 மொபைல் போன்களை பயன்படுத்தி உள்ளார். பிறகு, அவருடன் சேர்ந்து 36 பேர் அந்தச் செல்போன்களை அழித்துள்ளனர். சோதனை மற்றும் விசாரணையின்போது, தற்போது பயன்படுத்தும் மொபைல்போனின் கடவுச்சொல்லை கேட்ட போதும் கெஜ்ரிவால் அதனைத் தர மறுக்கிறார். விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்குவது கிடையாது. ஆவணங்களில் உள்ளவற்றுக்கு முரணாகப் பதில் அளிக்கிறார்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மேற்கண்ட வழக்கு ஏப்ரல் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *