நடிகர் சங்க கட்டிடப் பணிகள் தீவிரம் – அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மூத்த கலைஞர்களை கவுரவிப்பது, நடிகர் சங்க புதிய கட்டிடப் பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாகவும், தவறான தகவல்களையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் திரையுலகின் மூத்த நடிகை லதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோல், நாடகத் துறையில் சிறப்பாகப் பங்களித்த 5 கலைஞர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் பேசுகையில், சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டிடத்தை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது, நடிகர் சங்க கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாய்மொழியாக அழைப்பு விடுத்திருந்தோம். அவரும் கண்டிப்பாக வருவதாக உறுதியளித்துள்ளார். விரைவில் திறப்பு விழா தேதியை முடிவு செய்து, முதலமைச்சருடன் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்போம்” என்றார்.

தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் குறித்தும் கருணாஸ் எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில், “பணத்திற்காக பிரபலங்களை இழிவுபடுத்திப் பேசுவது அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும். இதுவரை தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் 9 யூடியூபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரமாக தொடரும்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *