‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம் – மதுரை வந்தடைந்தார் முதல்வர் விஜய்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கும் வகையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை த.வெ.க. தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, 22.6.2026 முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 107 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனைகளில் தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தபடியே விஜய் தனது பயணத்தை மேற்கொண்டார். முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் ராஜாஜி அரசு மருத்துவமனை வரையிலான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை மற்றும் கருப்பாயூரணி வழியாக ரோடு ஷோ பாணியில் முதலமைச்சர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *