‘கூகுள் பே’ வாயிலாக சிறை காவலர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்!அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் !

சென்னை: விரும்பிய உணவு வேண்டிய உதவிகளை செய்து தர ‘கூகுள் பே’ வாயிலாக சிறை காவலர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜூன் 14ல் கைது செய்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது புழல் மத்திய சிறை மருத்துவமனையில் முதல் வகுப்பு கைதியாக தங்க வைக்கப்பட்டு உள்ளார். விதி மீறி டி.ஐ.ஜி. ஒருவர் அவரை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்காக சிறையில் நடக்கும் திரைமறைவு வேலைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு விரும்பிய உணவு வேண்டிய உதவிகள் செய்ய காவலர் ஒருவருக்கு ‘கூகுள் பே’ வாயிலாக 30000 ரூபாய் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணுடன் சிறைக்காவலர் ஒருவரின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு ‘கூகுள் பே’ வாயிலாக பணம் அனுப்புவது மற்றும் பெறுவதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. அந்த அலைபேசி எண் நிரந்தரமாக எந்த காவலரிடம் இருக்காது. பணியில் இருக்கும் காவலர்களில் ஒருவர் தான் அந்த அலைபேசி எண்ணை வைத்திருப்பார்.

கைதிகளுக்கு வசதிகள் செய்து தர அவர்களின் உறவினர்களிடம் இருந்து அந்த அலைபேசி எண் வாயிலாகத் தான் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளதும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறைத்துறை காவலர்கள் அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *