Gandhi Jeyanti Special Article : உண்மையை நேசித்த மகாத்மா காந்தி.. சுவாரஸ்ய தகவல்கள்..!

ஒரு காலத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்ற ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி பிறந்த அந்தச் சிறுவன் தான் பின்னாளில் உலகம் போற்றிய மகாத்மா காந்தி உருவெடுத்தார். காந்தி சிறுவயதில் மிகவும் அமைதியானவராக இருந்தார்.

மற்றவர்களைப் போலவே அவருக்கும் பயம், தயக்கம் போன்றவை இருந்தன. ஆனால் அவரிடம் ஒரு முக்கியமான குணம் இருந்தது, உண்மையைப் பேச வேண்டும் என்ற எண்ணம்.. ஒருமுறை தான் செய்த தவறை மறைத்துவிடலாம் என்று நினைத்தாலும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற மனசாட்சி அவரைத் தூண்டியது. இறுதியில் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார். இதன் மூலம், தவறு செய்தாலும் அதை மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதை அவர் கற்றுக்கொண்டார்.

பின்னர் காந்தி இங்கிலாந்துக்குச் சென்று சட்டம் படித்தார். அதன் பிறகு வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு அவர் ஒரு நாள் ரயிலில் பயணம் செய்தபோது, தோலின் நிறத்தை காரணம் காட்டி அவரை ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டார்கள்.

அந்த சம்பவம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அவர் கையில் ஆயுதம் எடுக்கவில்லை. உண்மை மற்றும் அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு போராடினார்.1915-ஆம் ஆண்டு காந்தியடிகள் இந்தியா திரும்பினார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த காந்தி, அவர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரது போராட்ட முறை வித்தியாசமானது.ஆயுதம் இல்லை, வன்முறை இல்லை… உண்மை மற்றும் அகிம்சையே அவரது ஆயுதங்கள்!

அவர் எப்போதும், வன்முறையால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, உண்மை மற்றும் அகிம்சையின் வழியில் போராட வேண்டும்” என்ற எண்ணத்தை மக்களிடம் வளர்த்தார்.

1930-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு உப்பின் மீது வரி விதித்திருந்தது. கடல் நீரில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் உப்பைக்கூட மக்கள் தாங்களாக தயாரிக்க முடியாத நிலை இருந்தது. இதற்கு எதிராக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார்.

1930 மார்ச் 12-ஆம் தேதி, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி நோக்கி நடைபயணத்தைத் தொடங்கினார். அவருடன் பலரும் இணைந்தனர். சுமார் 240 மைல்கள் நடந்துசென்று, ஏப்ரல் 6-ஆம் தேதி தண்டி கடற்கரையை அடைந்தார். அங்கு கடல் நீரில் இருந்து உப்பை எடுத்து, ஆங்கிலேயர்களின் உப்புச் சட்டத்திற்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த தண்டி யாத்திரை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

1942-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்கான போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அப்போது காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அவரது புகழ்பெற்ற முழக்கம் “செய் அல்லது செத்து மடி!” என்ற உறுதியை வெளிப்படுத்தியது. ஆங்கிலேய அரசு காந்தியடிகளையும் பல தலைவர்களையும் கைது செய்தது. இருந்தாலும் இந்திய மக்களின் சுதந்திர வேட்கையை அடக்க முடியவில்லை.

பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் எண்ணற்ற மக்களின் பங்களிப்புக்குப் பிறகு, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது.நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் சுதந்திரத்தைக் கொண்டாடினர்.

ஆனால் காந்தியடிகள் அந்த நாளில் டெல்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்தார். மக்கள் அமைதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் காந்தியடிகளின் பணி முடிவடையவில்லை. மதம் மற்றும் சமூகத்தின் பெயரில் மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தினார். மக்களிடையே அமைதியும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல இடங்களுக்குச் சென்றார்.

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி, டெல்லியில் உள்ள பிர்லா இல்லத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நதுராம் விநாயக் கோட்சே இரண்டு முறை காந்தியடிகள் கொலை செய்ய முயற்சி செய்து, மூன்றாவது முறையாக அவரை சுட்டுக் கொன்றார். அப்போது காந்தியடிகளின் வயது 78. அவரது மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

ஆனால் காந்தியடிகளின் எண்ணங்களும் கொள்கைகளும் அத்துடன் முடிந்துவிடவில்லை. உண்மை, அகிம்சை, எளிமை, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்திய அவரது வாழ்க்கை, இன்றும் உலகம் முழுவதும் பலருக்கு ஒரு பாடமாக உள்ளது. காந்தியடிகளின் வாழ்க்கையைப் பார்த்தால் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், உண்மையைப் பேசுங்கள், தவறு செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள், வன்முறையைத் தவிருங்கள், அனைவரையும் சமமாக மதியுங்கள், நாட்டையும் மக்களையும் நேசியுங்கள்.

அதனால்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்திய மக்களால் “மகாத்மா” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.. அதனால்தான் காந்தியடிகளின் வாழ்க்கை ஒரு வரலாறு மட்டுமல்ல, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பாடம்.. காந்தியடிகளின் வாழ்க்கையில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் ஒன்று, “உண்மை மற்றும் அன்பின் வழியில் நடந்தால், ஒரு சாதாரண மனிதனாலும் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *