தென் மாநிலங்கள் மாநாடு – கோவளத்தில் அமித்ஷா தலைமையில் ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லுப்பட்டி விக்ரமர்கா, கேரள முதலமைச்சர் சதீசன், புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை வழங்கும் தென்மாநிலங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளையும் பின்பற்றுவதுடன், முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
பெங்களூரு மெட்ரோவை ஓசூர் வரை நீட்டிப்பது, ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்துவது, மக்கள்தொலைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்ததற்காக தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வதுடன் இதுகுறித்துச் சட்டப்பூர்வ உறுதியளிப்பது போன்ற கோரிக்கைகளும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
மாநிலங்களின் நிதித் தன்னாட்சியை மதித்து நியாயமான நிதிப் பகிர்வை வழங்குவது, ஜிஎஸ்டி வரம்புகளைத் தீர்மானிக்கும் நெகிழ்வுத் தன்மையை மாநிலங்களுக்குத் திரும்ப வழங்குவது, ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகளை அமைப்பது, போதைப்பொருள்களைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு உருவாக்குவது மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து சகோதர உணர்வுடன் பணியாற்றுவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *