தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி வரும் நிலையில், அவற்றைப் பாதுகாக்க குளங்களில் தேங்கியிருக்கும் நீரைக் குடம் குடமாக எடுத்துவந்து வயல்களில் தெளிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கான உரிய நீரைக் கேட்டுப் பெறத் திராணியற்ற தவெக அரசால், உயிரைக் கொடுத்து விளைவித்த நெற்பயிர்கள் கருகிக் காய்ந்து, ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாகத் தெரிவித்துள்ளார். கர்நாடகத்திடம் காவிரி நீரைக் கேட்டுப் பெற முடியவில்லை என்றும் தமிழகத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் ஒவ்வொன்றாகக் காவு கொடுத்துக் கொண்டிருப்பதுதான் தவெக அரசு கொண்டு வந்ததாகக் கூறும் மாற்றமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

